சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட சீராய்வு மனுவில் வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். விளையாடக்கூடாது என்று நீதிபதி ரோஹின்டன் நாரிமன் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 63 சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கான்வில்கர் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்தனர். ஆனால், 2 நீதிபதிகளான ரோஹின்டன் நாரிமன்,டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தனர். இருப்பினும் 5 நீதிபதிகள் அமர்வில் 3 பேர், 7 பேர் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைத்ததால், அந்தத் தீர்ப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனாலும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி சபரிமலைக்குப் பெண்கள் செல்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. அதற்குத் தடை விதிப்பது குறித்து நீதிபதிகள் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும், சீராய்வு மனுவை இரு நீதிபதிகள் தள்ளுபடி செய்ததன் மூலம் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை இருவரும் உறுதி செய்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
இந்த சூழலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவின் விசாரணை நீதிபதி ரோஹின்டன் நாரிமன் அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது.
அப்போது அமலாக்கப் பிரிவு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி ரோஹின்டன், குடிமக்களின் உரிமை குறித்து நீங்கள் அணுகுவது சரியான முறை அல்ல என்று தெரிவித்தார்.
அப்போது மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் பேசுகையில், " சபரிமலை விவகாரத்தில் நாங்கள் வழங்கிய தீர்ப்பைக் கவனமாக உங்கள் அதிகாரிகளைப் படிக்கச் சொல்லுங்கள். எங்களுடைய தீர்ப்பில் விளையாட்டுத்தனம் கூடாது என்பதைச் சொல்லிவிடுங்கள்.
தீர்ப்பைக் கவனமாகப் படித்துப் பார்த்து, அரசியலமைப்புப் பிரிவு 141 குறித்து நீதிமன்றம் என்ன தெரிவித்துள்ளது என்பதைக் கனிவுடன் படிக்கச் சொல்லுங்கள். எங்கள் உத்தரவுகளை அதிகாரிகள் சரியாகப் பின்பற்றுவதில்லை என்ற தோற்றம் இருந்து வருகிறது. எங்களின் உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். விதிமுறை மீறல் நடப்பதை அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவித்தார்.