மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று அம்மாநில முதல்வர் இன்று குற்றம் சாட்டியுள்ளார். அந்த நிதி இருந்திருந்தால், இந்நேரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மிகவும் உதவியாயிருக்கும் என்றும் மம்தா கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேற்கு வங்கத்தைப் பாதித்திருப்பது மிகப்பெரிய சூறாவளி. நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:
''சூறாவளி பாதிப்புக்குள்ளான வெள்ளப் பகுதிகளில் நிவாரணப் பணிகளைக் கையாள்வதில் மாநிலத்திற்கு உதவி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
மத்திய அரசு சுமார் 17,000 கோடி ரூபாய் எங்களுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அந்த நிலுவைத் தொகையை மத்திய அரசு எங்களுக்கு உரிய நேரத்தில் வழங்கியிருந்தால், இந்நேரம் நிவாரணப் பணிகளைச் செய்ய நாங்கள் அதைப் பயன்படுத்தியிருக்க முடியும்.
மேற்கு வங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். நிவாரணத் தொகை வழங்குவதில் அரசியல் விளையாட்டுகளைத் தவிர்க்க வேண்டும்.
மேற்கு வங்கத்தைப் பாதித்திருப்பது மிகப்பெரிய சூறாவளி. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பதற்குப் பதிலாக, காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். தயவுசெய்து அவ்வகை விளையாட்டுகளிலிருந்து விலகியிருங்கள் என்று நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்ல.
பாஜக ஊதுகுழல்களாக திகழும் சில தனிநபர்கள் தங்கள் அழுக்கான அரசியல் விளையாட்டுகளை நிறுத்திக்கொள்ளுங்கள். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு என்று சில குறிப்பிட்ட பணிகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் அவர்கள் பாதிக்கப்பட்ட மாநிலத்தோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.