இந்தியா

நிலச் சட்டம் போல் ஊழல் பிரச்சினைகளிலும் அழுத்தம் தொடரும்: ராகுல் உறுதி

பிடிஐ

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தைப் போலவே ஊழல் பிரச்சினைகளிலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தருவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

நிலம் கையக்கப்படுத்தும் மசோதாவில் பாஜக அரசு கொண்டு வந்த 6 முக்கியத் திருத்தங்களை திரும்பப் பெற நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள் மீண்டும் புதிய மசோதாவில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் ஒப்புதல் தேவை என்ற பிரிவும், நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் சமூகத் தாக்க மதீப்பீடு ஆகியவை மீண்டும் மசோதாவில் இடம்பெறுகிறது.

இதுதொடர்பாகப் பேசிய ராகுல் காந்தி, "நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் அரசு முதலில் கூச்சலிட்டது. அவர்கள் (பாஜகவினர்) மிக அதிகமான சத்தம் எழுப்பினர். பின்னர் மிரட்டத் தொடங்கினர். தற்போது பல்டி அடித்து, பின்வாங்கி விட்டனர்.

அதைப்போலவே, ஊழல், வியாபம் பிரச்சினைகளில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா, சுஷ்மா ஸ்வராஜ், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டவர்களின் ராஜினாமாவை வலியுறுத்தும் கோரிக்கையை வலுவாக எழுப்புவோம்.

அரசு எங்களை நாடாளுமன்றத்திலிருந்து வெளியே அனுப்பினாலும் சரி, அனுமதித்தாலும் சரி எங்களின் அழுத்தம் தொடரும். இப்பிரச்சினைக்காக நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்" என்றார் ராகுல்.

SCROLL FOR NEXT