கே.கே.முகமது 
இந்தியா

அயோத்தி அகழ்வாராய்ச்சிக்கு சம்ஸ்கிருதம் உதவியாக இருந்தது: இந்திய தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முகமது பேட்டி

செய்திப்பிரிவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிக்கு சம்ஸ்கிருத மொழி உதவியாக இருந்தது என்று தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முகமது கூறியுள்ளார்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏஎஸ்ஐ) மண்டல இயக்குநராக பணியாற்றியவர் புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் கே.கே.முகமது. கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முகமது, கொல்கத்தாவில் பிறந்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொல்பொருள் ஆய்வுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்ஸ்கிருதம், அராபிக், பார்சியம், பாலி உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவர்.

ஓய்வுக்குப் பின்னர் தற்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசித்து வருகிறார். தொல்பொருள் ஆய்வுத் துறையில் இவரது அரிய பணிகளுக்காக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது. இவர் முகலாயப் பேரரசரான அக்பர் நிர்மாணித்த ஃபதேபூர் சிக்ரி நகரில் மறைந்திருந்த இபாதத் கானா (தீன் இலாஹி) உள்ளிட்ட முக்கிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டார்.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் அகழாய்வு செய்தபோது பாபர் மசூதிக்குக் கீழே கோயில் இருப்பதை அறிந்து அதை உலகுக்குச் சொன்னவர் இவர்தான். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் மீதுதான் மசூதி கட்டப்பட்டிருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் அவர் நிரூபித்தார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், 1976-77 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வுப்பணியில் ஈடுபட்ட தொல்பொருள் ஆய்வாளர் பி.பி லால் தலைமையிலான முதல் இந்திய தொல்பொருள் குழுவில் கே.கே.முகமது இடம்பெற்றிருந்தார்.

மேலும் பாபர் மசூதியின் மேற்குப் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், தனது குழு பல்வேறு டெரகோட்டா சிற்பங்களை கண்டுபிடித்தது என்றும் இதுபோன்ற டெரகோட்டா சிற்ப கட்டமைப்புகள் இஸ்லாத்தில் (ஹராம்) தடை செய்யப்பட்டவை என்பதால் இந்த இடம் கோயில் இருந்த இடம்தான் என்பதை நிரூபிப்பதாக அவர் ஆணித்தரமாக எடுத்துரைத்து பாராட்டுகளைக் குவித்தார். இந்நிலையில் அயோத்தி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னர் கே.கே. முகமது கூறியதாவது: அகழ்வாராய்ச்சியின்போது சர்ச்சைக்குரிய பகுதியில் கோயில் இருந்ததற்கான அடையாளங்களை கண்டறிந்தோம்.

தற்போது அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி தந்து தீர்ப்பு வந்துள்ளதன்மூலம், அகழ்வாராய்ச்சியின் மூலம் நாங்கள் கூறிய கருத்து உண்மையாகியுள்ளது. இந்தத் தீர்ப்பே இறுதியானதாக இருக்கவேண்டும்.

இதைவிட சிறப்பான தீர்ப்பு வேறு ஒன்று அமையாது. இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் பணிபுரியும்போது ஆய்வாளர்களுக்கு சம்ஸ்கிருதம் போன்ற செம்மொழிகளை அறிந்திருத்தல் அவசியம். அயோத்தியில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது அந்த இடத்தில் கோயில் இருந்ததைக் கண்டறிய எனக்கு சம்ஸ்கிருதம் உதவியாக இருந்தது.

பாபர் மசூதிக்குக் கீழே, பழங்கால கோயில் இருந்தது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க சம்ஸ்கிருதம் உதவியது. ஏனெனில் கீழே இருந்த கோயில் பகுதியில் இருந்த தூண்கள் அதை பறைசாற்றின. பழங்கால இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளும்போது பல இடங்களில் சம்ஸ்கிருத மொழிகளுக்கான அடையாளங்கள், இடிபாடுகளைக் காண முடிந்தது.

எனவேதான் சம்ஸ்கிருத மொழி அவசியம் என்கிறேன். நான் பள்ளியில் படிக்கும்போது சம்ஸ்கிருதத்தை விரும்பி படிப்பேன். அகழ்வாராய்ச்சித் துறையை நான் தேர்ந்தெடுத்தபோது சம்ஸ்கிருதம் எனக்கு மிகவும் உதவியது. சம்ஸ்கிருதம் போன்ற செம்மொழிகளின் உதவி இல்லாமல், தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் யாராலும் பரிமளிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT