இந்தியா

ரஃபேல், சபரிமலை வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்தும், ரஃபேல் போர் விமான கொள்முதல் முறைகேடு புகார்களை நிராகரித்தும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு செயல்படுத்த முயன்றபோது அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் பரவலாக வன்முறை போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 4 புதிய ரிட் மனுக்கள் உள்ளிட்ட 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது சீராய்வு மனுக்களுக்கு ஆதரவாக வும் எதிராகவும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர். நாயர் சர்வீஸ் சொசைட்டி, சபரிமலை கோயில் தந்திரி, கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் கேரள அரசு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஆதரித்தது. சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து நீதிமன்றம் கவலைப்படக் கூடாது எனவும் கேரள அரசு கூறியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முதலில் எதிர்த்த தேவஸ்வம் போர்டு பிறகு தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனு மதிக்க வேண்டும் என்றது.

தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் வாதங் களுக்கு பிறகு இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இதுபோல் ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத் தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட பலர் உச்ச நீதி மன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய் தனர். இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு, கடந்த மே 10-ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில் இந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி வழக்கு

"ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, உச்ச நீதிமன்றமே திருடன் என்று கூறிவிட்டது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலின்போது விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் மீனாட்சி லேகி உச்ச நீதிமன்றத்தில், ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் அமர்வு விசாரித்தது. கடந்த மே 10-ம் தேதி இருதரப்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கிலும் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

- பிடிஐ

SCROLL FOR NEXT