அயோத்தி,
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியவாறு ராமர் கோயிலுக்கு புதிய அறக்கட்டளையை அரசு அமைக்க வேண்டிய அவசியமில்லை, அதற்காக ஏற்கெனவே ராம் ஜன்மபூமி நியாஸ் அமைப்பு இருக்கிறது என்று அதன் தலைவர் மகாந்த் நிருத்யா கோபால் தாஸ் இன்று தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று உச்ச நீதிமன்றம் அயோத்தி தொடர்பான தீர்ப்பு வழங்கியது. அதில் ''அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
ராம் ஜனம்பூமி நியாஸ் என்பது விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) நடத்தும் ஒரு அமைப்பாகும்.
ராம் ஜனம்பூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், ''ராமர் கோவில்
கட்டுவதற்கான அறக்கட்டளை (ராம் ஜனம்பூமி நியாஸ்) ஏற்கெனவே உள்ளது. அதற்கு நாங்களே ஒரு வடிவம் கொடுக்க முடியும். இதில் தேவைக்கேற்ப புதிய உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ள முடியும்'' என்றார்.
ஆனால் ராமர் கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய மற்ற தலைவர்கள் அறக்கட்டளையை நிறுவுவதில் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
திகம்பர் அகாராவின் தலைவர் மஹந்த் சுரேஷ் தாஸ், இதுகுறித்து தெரிவிக்கையில், ''புதிய அறக்கட்டளை அரசாங்கத்தால் உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது'' என்றார்.
திகம்பர் அகாரா
திகம்பர் அகாராவின் தலைவர் மஹந்த் சுரேஷ் தாஸ், புதிய அறக்கட்டளை அரசாங்கத்தால் உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. அறக்கட்டளையை அமைப்பது மத்திய அரசின் பொறுப்பாகும். அது ராம் ஜன்மபூமி நியாஸின் வேலை அல்ல. ஆனால் நியாஸின் பிரதிநிதிகள் அறக்கட்டளையில் சேர்க்கப்பட வேண்டும். என்றார்.
நிர்மோஹி அகாரா
நிர்மோஹி அகாரா தலைவர் மஹந்த் தினேந்திர தாஸ் கூறுகையில், நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி அறக்கட்டளை உருவாக்கப்பட வேண்டும் ஆனால் அகாரா உறுப்பினர்கள் அதில் சேருவது குறித்து நிபந்தனைகளை தெரிவித்தனர். நிர்மோஹி அகாராவும் ராம ஜன்ம பூமிக்கான ஒரு அறக்கட்டளைதான். எனினும் அரசாங்க அறக்கட்டளையில் சேரலாமா வேண்டாமா என்பதை உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள்" என்று அவர் கூறினார்.
வி.எச்.பி.
நீதிமன்றத்தில் தெய்வத்தின் பிரதிநிதியாக ஆஜரான வி.எச்.பி.யின் திரிலோகி நாத் பாண்டே, "அறக்கட்டளை அரசாங்கத்தால் உருவாக்கப்பட வேண்டும், அரசாங்கத்திலிருந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும். மஹந்த் நிருத்யா கோபால் தாஸை அரசு அறக்கட்டளையின் தலைவராக நியமிக்க வேண்டும்.
வி.எச்.பி முன்மொழியப்பட்ட மாதிரிக்கு ஏற்ப கோயில் கட்டப்பட வேண்டும் என்றும், அந்த அமைப்பு தயாரித்த கற்களை அதன் கட்டுமானத்தில் பயன்படுத்த வேண்டும்.
அறக்கட்டளையை உருவாக்கிய பின்னர் அரசாங்கம் கோவில் கட்டுமானத்திற்காக இந்து சமூகத்திடமிருந்து நிதி திரட்ட வேண்டும், அரசாங்க பணத்தை நிதிக்கு பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு திரிலோகி நாத் பாண்டே தெரிவித்தார்.
பிடிஐ