மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்காக ஆதரவு கடிதம் பெற 3 நாட்கள் அவகாசம் வழங்க ஆளுநர் மறுத்துவிட்டார் என்ற விஷயத்தை சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடவில்லை
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லை என 105 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் பாஜக மறுத்துவிட்டது. சிவசேனா கட்சியும் ஆளுநர் அளித்த காலக்கெடுவுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அளித்த காலக்கெடுவுக்குள் அந்த கட்சியாலும் பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவை பெற முடியாததால், ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைத்தார். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மாலைமுதல் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவந்ததற்கு எதிராகவும், ஆளுநர் தங்களுக்கு போதுமான கால அவகாசத்தை அளிக்கவில்லை என்ற காரணத்தை வைத்தும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனு உடனடியாக விசாரிக்கப்படவில்லை.
இதுகுறித்து சிவசேனா வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ் கூறுகையில், " மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தியதற்கு எதிராக மட்டுமே மனுவில் குறிப்பிட்டுள்ளோம். ஆட்சி அமைக்க ஆதரவு கடிதங்களைப் பெற 3 நாட்கள் அவகாசம் கேட்டும் ஆளுநர் கோஷியாரி அளிக்கவில்லை என்ற விஷயத்தை மனுவில் குறிப்பிடவில்லை.
திங்கட்கிழமைக்குள் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், சிவசேனா சார்பில் செவ்வாய்க்கிழமை விருப்பம் தெரிவித்தது என்று குறிப்பிட்டுள்ளோம். அதேசமயம், ஆட்சி அமைக்க போதுமான அவகாசம் வழங்காததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டோம்" எனத் தெரிவித்தார்
மேலும், அந்த மனுவில், " ஆளுநர் கோஷியாரின் முடிவு என்பது அரசியலமைப்புச் சட்டம் 14 மற்றும் 21 ஆகியவற்றை மீறிய செயல். 2-வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு 56 எம்எல்ஏக்கள் இருந்தும் ஆட்சி அமைக்க போதுமான அவகாசத்தை ஆளுநர் அளிக்கவில்லை. இது சட்டவிரோதம், அரசமைப்பு சட்டம் 14 -யை மீறிய செயல். ஆளுநர் 10-ம் தேதி ஆட்சி அமைக்க அழைத்தார், நாங்கள் 11-ம் தேதி விருப்பம் தெரிவித்திருந்தோம்.
அரசியலமைப்புச் சட்டப்படி அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க போதுமான கால அவகாசத்தை ஆளுநர் அளிப்பது அவருக்கு உரிய கடமை. அவர் மத்திய அரசின் ஏஜென்ட் போலவும், பிரதிநிதியாகவும் செயல்படக்கூடாது.
யாரும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்று ஆளுநர் முடிவு எடுப்பதற்கு முன்பாக, அரசியல் கட்சிகள் தங்களின் பேச்சுவார்த்தையை நடத்தி முடிப்பதற்கு போதுமான கால அவகாசத்தை அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது
இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிரா அரசு, சரத்பவார் தலைமையிலான என்சிபி கட்சி ஆகியவற்றை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்துள்ளது
பிடிஐ