இந்தியா

ஆங்கிலவழி கல்வியை கட்டாயமாக்கியதில் என்ன தவறு? - எதிர்க்கட்சியினருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் கேள்வி

செய்திப்பிரிவு

என்.மகேஷ்குமார்

ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக்கியதில் என்ன தவறு என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திர மாநிலத்தில், புதிய கல்வி திட்டம் வரும் 2020-ம் ஆண்டு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில், 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை ஆங்கில வழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி மற்றும் உருது ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து மாணவர்கள், படிக்கலாம். இது தவிர, தெலுங்கு மொழியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை படிப்படியாக 7, 8, 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்படுமென முதல்வர் ஜெகன் அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்க்கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாய்மொழியான தெலுங்கை இத்திட்டம் அழித்து விடும் என நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு முதல்வர் ஜெகன் காட்டமாக பதிலளித்துள்ளார். “உங்களுக்கு 3 மனைவிகள். 3 அல்லது 4 பிள்ளைகள். இவர்கள் அனைவரும் எந்த வழி பாடத்திட்டத்தில் படிக்கின்றனர்”? என்று பவன் கல்யாணை கேள்வி கேட்டுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரும் அவர்களது பிள்ளைகளை எந்த வழிப்பாட திட்டத்தில் படிக்க வைக்கின்றனர். ஆனால் இவர்கள் எல்லோரும் ஏழைகள் ஆங்கிலம் படிக்கும் போது எதிர்க்கின்றனர்” என்றார்.

இந்நிலையில், நேற்று விஜயவாடாவில், நாட்டிலேயே முதல் மத்திய கல்வித்துறை அமைச்சரான, மவுலானா அப்துல் கலாம் ஆசாத் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெகன் பேசியதாவது:பிள்ளைகள் ஆங்கிலம் கற்கவில்லையெனில் அவர்கள் வருங்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பது உறுதி.

ஏழை பிள்ளைகளுக்கும் ஆங்கிலம் கற்றுத்தர வேண்டுமெனும் உயர்ந்த லட்சியத்தில்தான் ஆங்கில வழிக்கல்வியை இந்த அரசு கட்டாயமாக்கி உள்ளது. ஆனால் இதனை சிலர் எதிர்க்கின்றனர். எதிர்ப்பவர்களின் பிள்ளைகள் எந்த மொழி வழியாக படித்தனர் என்பதை கூற முடியுமா ?இவ்வாறு முதல்வர் ஜெகன் பேசினார்.

SCROLL FOR NEXT