நள்ளிரவில் பேய் வேடமிட்டு வாகன ஓட்டியை வழிமறிக்கும் இளைஞர் 
இந்தியா

பெங்களூருவில் நள்ளிரவில் பேய் வேடமிட்டு வாகன ஓட்டிகளை பயமுறுத்திய 7 இளைஞர்கள் கைது: விபரீதத்தில் முடிந்த யூடியூப் பிராங்க் வீடியோ முயற்சி

செய்திப்பிரிவு

பெங்களூருவில் நள்ளிரவில் வெள்ளை உடை அணிந்து பேய் வேடமிட்டு வாகன ஓட்டிகளை பயமுறுத்திய யூடியூப் பிராங்க் வீடியோ குழுவை சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஆர்.டி.நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஷான் மாலிக் தனது நண்பர்களுடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் கல்லூரி மாணவர்கள் சிலர் சேர்ந்து பொதுமக்களை ஏமாற்றி பிராங்க் செய்யும் வீடியோக்களை தயாரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் வெள்ளை நிற உடை, நீண்ட கூந்தல், ரத்தக் களறியான முகம் என பேய் வேடமணிந்து யஷ்வந்த்பூர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் ஷான் மாலிக்கும் அவரது நண்பர்களும் பயமுறுத்தினர்.

இதனை கண்டு அச்சமடைந்த பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் தலைதெறிக்க பயந்து ஓடினர். அதில் சிலர் கீழே விழுந்து காயமும் அடைந்துள்ளனர். இதனிடையே சாலையோரம் படுத்து தூங்கியவர்களை எழுப்பி ‘ஜாம்பி' போல கடித்து தின்னவும் முயற்சித்தனர். இதனால் திடுக்கிட்டு எழுந்தவர்கள், குலைநடுங்க அலறிக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்த பொதுமக்கள், பேய் வந்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது இளைஞர்கள் ‘பிராங்க்’ வீடியோ எடுத்தது தெரியவந்தது. போலீஸார் அவர்களிடம் விசாரித்தபோது, கேளிக்கைக்காக வீடியோ எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மத்திகெரே, யஷ்வந்த்பூர் பகுதி மக்கள் நள்ளிரவில் இடையூறு செய்ததாக அளித்த புகாரின்பேரில், யூடியூப் பிராங்க் ஷோ குழுவினர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 503, 268, 141 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து ஷான் மாலிக் (22), நவீத் (21), சாகிப் (20), சையத் நபில் (21), யூசிப் அகமது (22), சஜில் முகமது (21), முகமது அயூப் (20) ஆகிய 7 பேரையும் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT