அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்துள்ளதால், பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்து மகாசபா வலியுறுத்தியுள்ளது.
அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. மேலும் கோயில் கட்டுவதற்கான திட்டத்தை 3 மாதத்தில் உருவாக்குவதுடன், ஒரு அறக்கட்டளையை தொடங்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கோயில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. இதற்கான அறக்கட்டளை அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஆலோசனைகளை தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் இந்து மகாசபா அமைப்பின் தலைவர் சுவாமி சக்கரபாணி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:
‘‘அயோத்தி வழக்கில் பல ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு கிடைத்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த இடத்தில் இடிக்கப்பட்ட கட்டடத்தின் மேல்பகுதி கோயில் எனவும், அது பாபர் மசூதி அல்ல எனவும் தெரிவித்துள்ளது. எனவே பாபர் மசூதியை இடித்து விட்டதாக கூறி குற்ற வழக்கு தொடர்ந்துள்ளது செல்லுபடியாகாது.
கரசேவகர்கள் கோயிலின் ஒரு பகுதியை தெரியாமல் இடித்துள்ளனர். எனவே பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். இதன் மூலம் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
1990 மற்றும் 1992-ம் ஆண்டு கரசேவையின்போது கொல்லப்பட்ட கரசேவகர்களை தியாகிகளாக அறிவிக்க வேண்டும்’’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட புகார் தொடர்பாக பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீது வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.