இந்தியா

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி? - பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி இன்று பிரேசில் சுற்றுப்பயணம் கிளம்பும் முன்பாக மத்திய அமைச்சரவை கூடி மகாராஷ்டிர அரசியல் விவகாரம் தொடர்பாக விவாதிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரவில் புதிய அரசு அமைவதில் பாஜக – சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில் சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிவடைந்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.

இதையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்குப் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக உறுதிபடத் தெரிவித்துவிட்டது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா எனக் கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி எடுத்தது. இதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது.

ஆனால் அந்தக் கட்சிக்கு வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.

எனினும் சிவசேனாவுக்கு சில நிபந்தனைகளை விதிக்க தேசியவாத காங்கிரஸ் தலைமை விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் இறுதி முடிவெடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் செல்லவுள்ளார். அவர் சுற்றுப்பயணம் கிளம்பும் முன்பாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

குறிப்பாக புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருவதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT