இந்தியா

ஹைதராபாத்தின் காச்சிகுடா ரயில் நிலையத்தில் ரயில்கள் மோதலில் 12 பேர் படுகாயம்: 8 மணி நேர போராட்டத்துக்கு பின் ஓட்டுநர் மீட்பு

செய்திப்பிரிவு

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்

ஹைதராபாத் காச்சிகுடா ரயில் நிலையத்தில் நேற்று காலையில் நின்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் ரயில் மோதியதில் 3 பெட்டிகள் நாசமடைந்தன. இதில் ரயில் இன்ஜின் ஓட்டுநர் 8 மணி நேர கடும் முயற்சிக்கு பின்னர் மீட்கப்பட்டார். இந்த விபத்தில் 12 பயணிகள் படுகாயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள காச்சிகுடா ரயில் நிலையத்தில் நேற்று காலை10.30 மணியளவில் 4-வது பிளாட்பாரத்தில் ஹந்திரி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுகொண்டிருந்தது. அந்த ரயில் மீது, ஃபலக்சுமாவிலிருந்து செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த புறநகர் ரயில் பயங்கரமாகமோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ரயிலின் இன்ஜினில் இருந்த ஓட்டுநர் (பைலட்) சந்திரசேகர் என்பவர் இரு ரயில் பெட்டிகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். விபத்தில் 3 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. விபத்தில் ரயில்களில் பயணம்செய்த 12 பயணிகள் படுகாயமடைந்தனர்.

மேலும் 30 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காச்சிகுடா ரயில் நிலையம் நெருங்கிக் கொண்டிருந்ததால், அங்கு வந்த புறநகர் ரயில் சற்று நிதானமாக வந்தது. இதனால் உயிர் சேதம் இல்லாமல் பயணிகள் தப்பினர். இல்லாவிட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே ரயில் தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்தது சிக்னல் கோளாறு என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஓட்டுநரின் (பைலட்) அலட்சியத்தால்தான் இந்ததவறு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர்சந்திரசேகர் இரு ரயில்களுக்கிடையே சிக்கிக்கொண்டார். இவரை பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து காப்பாற்ற முயற்சித்தனர். வெல்டிங் கட்டர்கள் மூலம் ரயில் பாகங்களை வெட்டி அவரை உயிருடன் மீட்க பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஓட்டுநர் சந்திரசேகர் மீட்கப்பட்டார். காயமடைந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் சந்திரசேகர் ஆகியோர் உஸ்மானியா மற்றும் காச்சிகுடா அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT