பாஜக அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர அனைத்துக் கட்சி கூட்டம் நாளை (திங்கள்) நடைபெறவுள்ள நிலையில் சிந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதாவது உலக அளவில் நாட்டிற்கு அவப்பெயர் பெற்றுத் தந்த வியாபம் முறைகேடு விவகாரத்தில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்யும் கோரிக்கையிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
“வியாபம் முறைகேடு விவகாரத்தை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் உரத்தக் குரலில் எழுப்பி, ஊழல் குறித்த பாஜக-வின் இரட்டை நிலையை அம்பலபடுத்துவோம். காவிக் கட்சியின் ஊழல் குறித்த பேச்சும் செயலும் வெவ்வேறு திசையில் பயணிக்கின்றன.
எனவே நாடாளுமன்றத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும். ஊழல் விவகாரங்கள் முற்றுபெறும் வரையில் முடக்கம் நீடிக்கும். காங்கிரஸ் இந்த விவகாரத்தில் திட்டவட்டமாக உள்ளது.
கொள்கைத் தீர்மானமான பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் அவரது கட்சியினரும் இப்போது முடிவெடுக்க நேரம் வந்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அரசு ஊழல்களின் மீது அமர்ந்திருக்கிறது. உண்மையான அர்த்தத்தில் நடவடிக்கை தேவை என்று மக்கள் விரும்புகின்றனர்.
முந்தைய 15-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 1,340 மணி நேரங்களில் 980 மணி நேரங்களை பாஜக முடக்கியுள்ளது.
விவசாயிகள் நிலம் அபகரிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அதன் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் நில மசோதாவை அமல்படுத்த வேண்டும்” என்று சிந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.