புதுடெல்லி
நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு நியமித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய் நகர மேம்பாடு நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனால், அவருக்குரிய இடத்தில் மாநிலங்களவை எம்.பி. மன்மோகன் சிங் நிதிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார் என மாநிலங்களவை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உறுப்பினராக இடம் பெற வேண்டும் என்பதற்காகவே, திக்விஜய் சிங் அந்தக் குழுவில் இருந்து விலகினார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை நாட்டின் நிதியமைச்சராக மன்மோகன் சிங் இருந்தார். 2014 செப்டம்பர் முதல் 2019 மே மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிந்தது. அதன்பின் ஆகஸ்ட் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு முன் நிதித்துறைக்கான நிலைக்குழுவில் மன்மோகன் சிங் இருந்தபோது, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தீவிரமாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ