புதுடெல்லி
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்வது பற்றி 17-ம் தேதி நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என வழக்கறிஞர் சப்ரயப் ஜிலானி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் உ.பி. சன்னி வக்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகியுமான சப்ரயப் ஜிலானி ‘‘தீர்ப்பில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இந்த விஷயத்தில் சட்ட விஷயங்களை நாங்கள் ஆராய்வோம். இந்த தீர்ப்பில் எங்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை’’ என அப்போது கூறியிருந்தார்.
இந்தநிலையில் அவர் இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் அயோத்தி விவகாரத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்வது தொடர்பாக கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்வது தேவையா என்பது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை. பல்வேறு கருத்துகள் உள்ளன. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கூட்டம் 17-ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சீராய்வு மனு தேவையா என்பது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்’’ எனக் கூறினார்.