கடப்பா
ஆந்திராவில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்குள் பசு ஒன்று ஒவ்வொரு நாளும் உள்ளே நுழைந்து அமர்ந்துவிட்டுச் செல்லும் வேடிக்கையான நிகழ்வு நடந்து வருகிறது. இதனால் விற்பனை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கடப்பா மாவட்டத்தில் உள்ள மைடுகூர் நகரத்தில் ஒரு ஜவுளிக்கடைக்கு பசு ஒன்று தினமும் வந்து செல்வது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைடுக்கூர் நகரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கிளாத் ஷோரூம் கடைக்குள் நுழையும் அந்தப் பசு கடையில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிக்கு நேராக தரையில் அமர்ந்துவிடுகிறது. இரண்டு மூன்று மணிநேரம் கடந்த பிறகு அங்கிருந்து சென்றுவிடுகிறது.
இதுகுறித்து இக்கடையின் உரிமையாளர் பி.ஒபையா கூறுகையில், ''கடந்த கோடை காலத்தில் ஒருநாள் இந்தப் பசு கடைக்குள் நுழைந்தது. மின்விசிறிக் காற்றில் இரண்டு மூன்று மணிநேரம் அமர்ந்துவிட்டு பின்னர் சென்றுவிட்டது.
முதன்முறையாக பசுமாடு கடைக்குள் நுழையும் போது எங்களுக்கு குழப்பமாக இருந்தது. கடையிலிருந்து மாட்டை விரட்டவும் முயன்றோம். ஆனால் அது ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை. சில மணிநேரங்கள் இந்தக் கடை நிழலில் அமர்ந்துவிட்டு பின்னர் தானாகச் சென்றுவிட்டது.
அதிலிருந்து ஒவ்வொரு நாளும் கடைக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டுவிட்டது.
முதன்முதலாக பசு உள்ளே வந்தபோது, நம்முடைய வியாபாரம் அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நினைத்ததற்கு நேர்மாறாக கடை வியாபாரம் அதிகரிக்கத் தொடங்கியது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்தப் பசுமாட்டினால் இதுநாள் வரை என் கடையில் ஒரு சேதாரமும் இல்லை என்பதுதான்.
மறுபுறம் என் மனைவி, கடைக்கு வருகை தரும் பசுவை ஒரு நல்ல சகுனமாகக் கருதி, பசுவுக்குப் பூஜை செய்யத் தொடங்கியுள்ளார்’’ என்றார்.
ஏஎன்ஐ