இந்தியா

134 ஆண்டுக்கு முன் தொடங்கிய பிரச்சினை

செய்திப்பிரிவு

புதுடெல்லி

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துக்களுக்கான புனித இடம் என 134 வருடங்களாக பிரச்சனை நிலவுகிறது. இப்பிரச்சினை முதன்முறையாக ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாகி, இன்றுவரை நடைபெற்று வருகிறது.

வட இந்தியாவில் நிலவிய முகலாயர் ஆட்சி முடிந்து ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்தில், 1885-ல் ராமஜென்ம பூமி எனும் அமைப்பின் தலைவராக இருந்த ரகுபீர்தாஸ் என்பவர் பைசாபாத் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அதில், பாபர் மசூதியின் அருகிலுள்ள ராம் ஜபுத்திரா எனும் இடத்தில் 21 அடி நீளம் மற்றும் 17 அடி அகலத்தில் ராமருக்காக ஒரு கோயில் கட்ட அனுமதி வேண்டினார்.

இதை முகம்மது அஸ்கர் என்பவர் கடுமையாக எதிர்த்தார். இந்தப் பிரச்சனை 1855-ல் எழுந்து இந்து-முஸ்லிம் கலவரமாக மாறியதை சுட்டிக்காட்டிய அவர், ரகுபீர்தாசின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என வேண்டினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கர்னல் எஃப்.ஈ.ஏ.சேமியர், கோயில் கட்ட மார்ச் 18, 1886-ல் அனுமதி மறுத்தார்.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் நவம்பர் 1, 1886-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், அயோத்தி தொடர்பான வழக்கு மீண்டும் தொடங்கியது. இந்த வழக்கில்தான் நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT