புதுடெல்லி
அயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் நரேநதிர மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் என உலக நாடுகளின் முன்னணி ஊடகங்களில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்த செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான ‘நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியில், “பல நூற்றாண்டுகளாக நீடித்த அயோத்தி விவகாரத்தில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவை மறுசீரமைப்பதில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது"அமெரிக்காவின் மற்றொரு முன்னணி நாளிதழான ‘வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள செய்தியில், “அயோத்தி தீர்ப்பு பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதன் மூலம் பாஜகவின் முக்கிய லட்சியம் நிறைவேறியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த ‘கார்டியன்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றார். அயோத்தி தீர்ப்பு மூலம் அவருக்கு மீண்டும் மகத்தான வெற்றி கிடைத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பிய செய்தியில், “உலகின் மிக முக்கியமான நிலப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் ‘சிஎன்என்' தொலைக்காட்சி செய்தியில், “இந்தியாவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் ‘டான்' நாளிதழ் மட்டும் எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “அயோத்தி தீர்ப்பால் இந்துக்கள், முஸ்லிம்கள் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இதர பாகிஸ்தான் ஊடகங்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளன. பாகிஸ்தான் தவிர இதர உலக நாடுகளின் ஊடகங்கள், அயோத்தி தீர்ப்பின் மூலம் மிகப்பெரிய பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளன.