இந்தியா

அயோத்தி வழக்கில் 92 வயதான நிலையிலும் நின்று கொண்டே வாதாடிய பராசரன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரர் ‘ராம் லல்லா விராஜ்மன்' (குழந்தை ராமர் விக்கிரகம்). ஷியா வக்பு வாரியம், நிர்மோகி அகாடா மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ராம் லல்லா விராஜ்மனின் மனுவை மட்டும் ஏற்றுக் கொண்டு அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட அனுமதி வழங்கியுள்ளது. ராம் லல்லா விராஜ்மன், தெய்வ சிலையாகும்.

அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ராமர் கோயிலின் மூல விக்கிரம் ஆகும். உரிமையியல் சட்ட விதியின்படி ராம் லல்லா விராஜ்மன் சட்டரீதியான நபராகவும், மைனராகவும் கருதப்படுகிறார். ஒரு காப்பாளர், அறங்காவலர் மூலம் வழக்கு தொடுக்கும் உரிமையையும் பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் ராம் லல்லா விராஜ்மனுக்காக வாதாடியவர் 92 வயதான மூத்த வழக்கறிஞர் பராசரன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், ஒரு ரூபாய் கூட ஊதியமாகப் பெறவில்லை. விசாரணையின்போது அவரது முதுமையை கருத்திற் கொண்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், “நீங்கள் நாற்காலியில் அமர்ந்து வாதாடலாம்” என்று சலுகை வழங்கினார்.

இதை ஏற்க மறுத்துவிட்ட பராசரன், “வழக்கறிஞர் நின்று வாதாடுவதுதான் முறை. என் ராமனுக்காக நிற்பேன். நிற்க முடியாத நிலை ஏற்பட்டால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன். இதுதான் எனது கடைசி வழக்கு” என்றார். வழக்கு நடைபெற்ற 40 நாட்களும் அவர் நின்று கொண்டே வாதாடினார்.

தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த அனைவரும் அவரை கதாநாயகனாக கொண்டாடினர். அவருடன் நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடந்த 1958 முதல் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளில் பராசரன் வாதாடியுள்ளார். கடந்த 1983 முதல் 1989 வரை மத்திய அரசின் அட்டர்னி ஜெனராகப் பணியாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது சொலிசிட்டர் ஜெனரலாக பராசரன் பணியாற்றினார். அப்போது ஒரு வழக்கில் அரசு தரப்பு இவரது ஆலோசனையை ஏற்க மறுத்தது. இதன் காரணமாக அந்த வழக்கில் அரசுக்காக வாதாட மறுத்துவிட்டார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பராசரனுக்கு பத்ம பூஷண் விருதும், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது.

சிதம்பரம் கோயில் மேற்கோள் அயோத்தி வழக்கில் பராசரனுக்கு பக்கபலமாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதாடினார். ராமன் மீது அதிக பக்தி கொண்ட இவர் வழக்கு விசாரணை நடைபெற்ற 40 நாட்களும் காலணி அணியவில்லை.

விசாரணையின்போது, “விக்கிரகங்கள் குறிப்பிட்ட வடிவில் இருக்க வேண்டும் என்று கருத வேண்டியதில்லை. சுயம்புவாக உருவானவை குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்குவதில்லை. சிதம்பரம் கோயிலில் இறைவன் அருவமாக இருக்கிறார் என்று திரை போடப்பட்டு காட்டப்படுகிறது. வான்வெளியை இறைவனாக கருதி வழிபடுகின்றனர். பஞ்சபூதங்களும் இறையம்சத்தை கொண்டுள்ளன. ஆயோத்தி நிலம் ராமனின் அம்சமாகும்” என்று அவர் வாதிட்டார்.

SCROLL FOR NEXT