ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
பொதுமக்களிடம் நன்கொடை பெற்று அயோத்தியில் மத்திய அரசு ராமர் கோயில் கட்ட வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) வலியுறுத்தியுள்ளது.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதில், அயோத்தியில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், இந்து சமய துறவிகள், விஎச்பி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு அமைக்கும் அறக்கட்டளையில் உறுப்பினராகும் விருப்பத்தை விஎச்பி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அயோத்தியில் உள்ள விஎச்பி தலைமையக செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறும்போது, ‘கோயில் கட்டும் அறக்கட்டளையில் உறுப்பினராக விஎச்பி ஆர்வமாக உள்ளது. ராமர் பிறந்த இடத்திலான கோயில் என்பதால் இங்குள்ள ராமானந்த் சம்பிரதாய சாதுக்களும், முக்கிய இந்து அமைப்பின் துறவிகளும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நடைபெற்ற கரசேவை போராட்டங்களில் விஎச்பியினர் பெரும் பங்கு வகித்தனர். அப்போது பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சுமார் இரண்டு லட்சம் செங்கல்கள் விஎச்பியின் பாதுகாப்பில் உள்ளன.
இவற்றுடன். அயோத்தியின் கர்சேவக்புரத்தில் ஒரு முகாம் அமைத்து கோயிலுக்கான தூண்களையும் விஎச்பி தயார் செய்து வந்தது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பல கோடி ரூபாய் விஎச்பி சார்பிலும் வசூலிக்கப்பட்டிருந்தது. இதை கோயில் செலவுக்கு அளிக்க விஎச்பி முன்வர வேண்டும் என அகில இந்திய சாதுக்கள் சபை வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து சரத் சர்மா மேலும் கூறும்போது, ‘ராமர் கோயில் என்பதால் அதற்கான செலவை கணக்கிட முடியாது. பொதுமக்களிடம் வசூல் செய்த பல கோடி ரூபாயில், 65 சதவிகிதப் பணியாக சிற்பத்தூண்கள் தயார் செய்வதில் செலவானது. அதேவகையில், மீதம் உள்ள பணிக்கான தொகையை மத்திய அரசும் பொதுமக்களிடமே நன்கொடை பெற்று கோயில் கட்ட வேண்டும். இதில் எங்களிடம் உள்ள செங்கல்களும் பயன்படுத்தப்பட வேண்டும்.’ எங்கள் கணிப்பின்படி இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் கோயிலின் தரைத்தளம் தயாராகி விடும்.’ எனத் தெரிவித்தார்.
இதனிடையே, அறக்கட்டளை அமைக்க உச்ச நீதிமன்றம் மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது. இதனால், அறக்கட்டளை அமைப்பதில் மத்திய அரசு அவசரம் காட்டாது எனத் தெரிகிறது.