வீட்டு பணிப் பெண்களுக்கான புதிய தேசிய கொள்கையை மத்திய அரசு தயார் செய்து வருகிறது.
இந்த கொள்கையில், வீட்டு வேலைக்காக அமர்த்தப்படும் பெண்களுக்கு மாதம் ரூ. 9000 ஊதியம், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பது, ஆண்டுக்கு 15 நாள் ஊதியத்துடன் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
பணிப்பெண்களை கொத்தடிமைகளாக நடத்துவது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான அம்சங்கள் புதிய கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
பணிப்பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறுகிறது. இதை கருத்தில்கொண்டு அவர்களுக்காக சமூக பாதுகாப்புத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. பெண்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவோர் கட்டாயமாக சமூக பாதுகாப்புத் திட்டத்தில் நிதிப் பங்களிப்பு செய்யவேண்டும்.
வீட்டுவேலையில் சேரும் பெண்கள் தொடர்ந்து கல்விகற்பதற்கு உரிமை, பாதுகாப்பான பணிச் சூழல், அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடு ஆகியவை இந்த கொள்கையில் உள்ள முக்கிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. பணிக்கு அமர்த்துவோரும், பணிப் பெண் வேலை செய்யும் பெண்களும் குழுக்கள் அமைத்துக் கொள்வது உரிமையாக்கப்பட உள்ளது. இதைகொண்டு ஒருவருக்கொருவர் பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.
தொழிலாளர் நலத்துறை தலைமை இயக்குநர் இறுதிசெய்த இந்த கொள்கை முன்வடிவானது கடந்த வாரத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் வழங்கப்பட்டது.
இந்த கொள்கை அமலுக்கு வந்தால் வேலைக்கு அமர்த்திக் கொள்வோர், வீட்டு வேலையில் சேரும் தொழிலாளர், இவர்களுக்கு பாலமாக இருக்கும் இடைநிலை அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படும். இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமானதாக இருக்கும்.