மத்திய பிரதேசத்தின் சத்புரா வனப்பகுதியில் உள்ள இலுப்பை மரத்தை தொடுவதற்காக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் முதியவர் ஒருவரை அவரது குடும்பத்தினர் அழைத்து வருகின்றனர். 
இந்தியா

ம.பி.யில் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை: காட்டில் உள்ள இலுப்பை மரத்தை தொடுவதற்கு குவியும் மக்கள்

செய்திப்பிரிவு

போபால்

இலுப்பை மரத்தை தொட்டால் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையில் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ளது நயாஹான் கிராமம். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள சத்புரா வனப்பகுதி பெரிய புலிகள் சரணாலயமாக விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, நயாஹான் கிராமத்தைச் சேர்ந்த ரூப் சிங் தாக்குர் என்பவரின் வீடியோ ஒன்று வெளியானது. அதில், தனக்கு தீராத மூட்டு வலி இருந்ததாகவும், சத்புரா வனப்பகுதியில் உள்ள ஒரு இலுப்பை மரத்தை தொட்டதும் அந்த வலி குணமாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அந்த மரத்தை தொட்டால் நாள்பட்ட வியாதிகளும் குணமாவதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வீடியோவானது வாட்ஸ்-அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதன் விளைவாக, தற்போது அந்த இலுப்பை மரத்தை தொடுவதற்காக மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சத்புரா வனப்பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சுவாசக் குழாய் பொருத்தப்பட்டிருப்பவர்களும் பெருமளவில் இங்கு வருகின்றனர்.

இது, தடை செய்யப்பட்ட வனப்பகுதி என்றபோதிலும், ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால் அவர்களை தடுக்க முடியவில்லை என சத்புரா வன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், ஏராளமான மக்கள் வருவதால் வனப்பகுதிக்கு செல்லும் பாதையில் ஏராளமான கடைகள் முளைத்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT