இந்தியா

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் வேண்டுகோளை ஏற்று முலாயம் சிங் மீதான வழக்கை வாபஸ் பெற்ற மாயாவதி

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

உத்தரபிரதேச மாநில அரசு விடுதியில் 1995 ஆம் ஆண்டு தன்னை கொல்ல முயன்றதாக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் மீது தொடுக்கப்பட்ட வழக்கை முன்னாள் முதல்வர் மாயாவதி வாபஸ் பெற்றுள்ளார். அவரது மகன் அகிலேஷ்சிங் யாதவின் வேண்டுதலுக்கு இணங்க வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக் 8 மாதங்களுக்குப் பிறகு தகவல் வெளியாகியுள்ளது. 1995-ம் ஆண்டில் உ.பி.யில் கல்யாண் சிங் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டது.

இதைத் தடுக்க பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் அப்போது சமாஜ்வாதி தலைவராக இருந்த முலாயம் சிங் முதல்வரானார். இந்த ஆட்சியின் இரு ஆண்டுகளுக்கு பின் இரண்டு கட்சிகளுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு முலாயம் ஆட்சிக்கான ஆதரவை பகுஜன் சமாஜின் நிறுவனரான கன்ஷிராம் வாபஸ் பெறுவதாக ஜூன் 2, 1995-ல் அறிவித்தார். அன்று, லக்னோ விருந்தினர் மாளிகையில் 5 எம்எல்ஏக்களுடன் சிக்கிய மாயாவதியை சமாஜ்வாதியினர் தாக்கியதால் 2 கட்சிகளும் எதிரும், புதிருமானது.

இந்த சம்பவத்தில் தமது கட்சியின் ஐந்து எம்எல்ஏக்களை கடத்தியதுடன், அவர்களின் ஆதரவை பெற ரூ.50 லட்சம் லஞ்சம் தர முயன்றதாக வழக்கு பதிவானது. மாயாவதி கட்சியினர் பதிவு செய்த இந்த வழக்கில், முலாயம் சிங்குடன் சேர்த்து அவரது சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ், ஆசம் கான் உள்ளிட்ட சமாஜ்வாதியின் மூத்த தலைவர்கள் 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த வழக்கு மாயாவதி உத்தரவால் அவரது கட்சியின் மூத்த தலைவரான பர்குராம் வர்மா மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 26 வருடங்களுக்கு பின் கடந்த மக்களவை தேர்தலுக்காக மாயாவதியும், அகிலேஷும் கூட்டணி அமைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, தன் மீது தாக்குதல் நடந்த அரசு விடுதி சம்பவத்துக்கு காரணமானவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, தன் தந்தை மீதான வழக்கை மகன் அகிலேஷ் வேண்டுதலுக்கு இணங்க மாயாவதி கடந்த பிப்ரவரி 26-ல் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றுள்ளார். அன்று முதல் சுமார் எட்டு மாதங்களாக காக்கப்பட்டு வந்த இந்த ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது.

இதனிடையே, மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைவதை தடுக்க முடியாமல் போனது. இதனால், சமாஜ்வாதியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக மாயாவதி அறிவித்தார். இதன் பிறகு உபியில் நடைபெற்ற 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டார். எனினும், இடைத்தேர்தலில் எந்த தொகுதியிலும் மாயாவதியால் வெற்றிபெற முடியாமல் போனது. அதன் மூன்று தொகுதிகளில் சமாஜ்வாதிக்கும் மீதம் உள்ள தொகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணியும் வெற்றி பெற்றன.

SCROLL FOR NEXT