புதுடெல்லி
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், இன்னும் 4 முக்கிய வழக்குகளில் இந்த வாரம் தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியோடு முடிகிறது. அவரின் கடைசி வேலை நாள் வரும் 15-ம் தேதியாகும். 16, 17-ம் தேதி சனி,ஞாயிறு என்பதால், 15-ம் தேதிக்குள் 4 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, நூற்றாண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகார வழக்கில் அனைவரும் மனநிறைவு பெறும் வகையிலான தீர்ப்பைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று வழங்கியது.
அடுத்ததாக, சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற வழக்கில் தீர்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு கேரளாவில் இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 65 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி. நூற்றாண்டுகளாக அங்கு 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்ற பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது என்று சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம்.
இரண்டாவதாக, மத்திய அரசு பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி அளித்த தீர்ப்பில் எந்தவிதமான ஊழலும் ரஃபேல் விமானக் கொள்முதலில் நடக்கவில்லை என்று அரசுக்கு நற்சான்று அளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவும் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது.
மூன்றாவதாக, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தவறாகத் திரித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கூறினார் என்று பாஜக எம்.பி. மீனாட்சி லெகி கிரிமினல் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் திரித்துக் கூறி, காவல்காரர் திருடன் என்று ரஃபேல் வழக்கில் பிரதமர் மோடியை மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்.
ஆனால், ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில்தான் அந்தத் தகவலைத் தெரிவித்தேன் என்று ராகுல் காந்தி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது.
நான்காவதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் சேர்க்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றச் செயலாளர், அதன் மத்திய தகவல் அதிகாரி ஆகியோர் 2010-ம் ஆண்டு 3 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ