மும்பை
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பாஜக - சிவசேனா இடையே கடும் இழுபறியான சூழல் நீடித்து வரும் நிலையில், காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
அச்சமூட்டும் அரசியல் செய்கிறார்கள். ஹிட்லர் கூட ஒரு நாள் அழிந்துபோனார் என்பதை நினைவில் கொள்ளட்டும் என்று காபந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரைக் குறிப்பிடாமல் சிவசேனா விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
ஆட்சியில் சமபங்கை சிவசேனா கேட்டு பிடிவாதம் செய்கிறது. ஆனால், அவ்வாறு எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷியாரி நேற்று அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், பாஜகவுக்கு இருப்பதோ 105 இடங்கள் மட்டுமே. மற்ற இதர சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றால்கூட 130 எம்எல்ஏக்களுக்கு மேல் தாண்டாது.
முதல்வர் பதவி இல்லாமல் பாஜகவை ஆதரிக்கப் போவதில்லை என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்து வருகிறது. பாஜகவை தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்காது. இந்த சூழலில் பாஜக என்ன செய்யப்போகிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மாநிலத்தில் சிலர் அச்சமூட்டும், மிரட்டல் அரசியலைக் கையில் எடுத்து அரசியல் ஆதரவு பெற நினைக்கிறார்கள். அது நிச்சயம் அவர்களுக்கு உதவாது. ஒரு விஷயத்தை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். எதேச்சதிகார ஹிட்லர் கூட ஒருநாள் அழிந்துபோனார், அடிமைத்தனம் அகன்றுவிட்டது.
பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்தைப் பெற்றதால் 2-வது முறையாக முதல்வராக வந்துவிடலாம் என நினைத்தாலும், அவரால் இன்னும் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை.
அவரால் பதவி ஏற்கவும் முடியவில்லை. ஏனென்றால் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மாநிலத்தில் நடக்கும் அரசியல் குழப்பங்களில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், இன்னும் மாநிலத்தில் புதிய ஆட்சி அமையவில்லை. முதல்வர் பதவி ஏற்க முடியவில்லை.
பாஜகவின் மிகப்பெரிய கூட்டணிக் கட்சியான சிவசேனா, பதவி முடிந்து வெளியேறும் முதல்வரிடம் பேசுவதற்குத் தயாராக இல்லை. இந்த முறை, எங்களின் சுற்று. உத்தவ் தாக்கரேதான் அடுத்த முதல்வரை முடிவு செய்யப் போகிறார்.
பழிவாங்கும் அரசியல், கெஞ்சும் மனப்பான்மை, மோசமான அரசியல் சதிகள் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவரவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். தனது பதவியால் மற்றவர்களை இதற்கு முன் அச்சுறுத்தியவர்கள் இன்று அவர்கள் பயப்படுகிறார்கள்''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிடிஐ