இந்தியா

ஆள் கடத்தலுக்கு எதிரான மசோதாவை விரைவாக நிறைவேற்ற வேண்டும்: ஸ்மிருதி இரானியிடம் திமுக எம்.பி. கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஆள் கடத்தலுக்கு எதிரான மசோதாவை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் எம்.பி.யான டாக்டர் செந்தில்குமார் டெல்லியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பணிகளைப் பாராட்டி மனு அளித்தார்.

இது குறித்து தருமபுரி தொகுதி எம்.பி.யான செந்தில்குமார் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

''மக்களவையில் 2018 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆள்கடத்தலுக்கு உள்ளான நபர்களின் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு மசோதா பற்றி நான் குறிப்பிட விரும்புகின்றேன். நாட்டில் அதிகம் பேசப்படாத இந்தியாவில் தொழிலாளர் மற்றும் பாலியல் மற்றும் ஆள் கடத்தலைத் தடுக்க உங்கள் அமைச்சகம் எடுக்கும் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்.

இந்த மசோதாவில் முக்கிய நடவடிக்கைகளை அடையாளம் காண வேண்டிய தேவை உள்ளது. ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்க வேண்டிய உதவிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் அதற்கான அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில நிலையில் ஒருங்கிணைப்பு, பாதிக்கப்பட்ட நபர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை குறித்து அமைச்சகத்தைப் பாராட்டுகிறேன்.

நம்முடைய நாட்டில் ஏழை மற்றும் சமூக- பொருளாதார சமூகங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான முக்கியத்துவத்தை உங்கள் அமைச்சகம் சரியாக கண்டறிந்துள்ளது. நம்முடைய நாட்டில் மனிதக் கடத்தல் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட குற்றமாகும். இது மகளிர் மற்றும் குழந்தைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரானதாகும். 2017 ஆம் ஆண்டு மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 5,789 என்று தேசிய குற்ற ஆவண வாரியம் கண்டறிந்துள்ளது.

பல்வேறு வகை மனிதக் கடத்தலில் 95 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டறியப்பட்ட 5,789 பாதிக்கப்பட்ட நபர்களில் 37 சதவீத நபர்கள் கட்டாயத் தொழிலாளர், வீட்டு வேலை மற்றும் பிச்சை ஆகியவற்றுக்காக கடத்தப்படுகின்றனர்.

2030 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 1.84 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்களை விடுவிக்கவும், மறுவாழ்விற்குமான உறுதிப்பாட்டைச் செய்யவும், இந்தக் குற்றத்திற்கான வழக்குகளை வலிமைப்படுத்தவும் வேண்டியுள்ளது.

2016 ஆம் ஆண்டு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் உறுதிப்பாட்டை எடுத்தது. விடுவிக்கப்பட்ட நபர்களுக்கான மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கான நீதியை சரியான நேரத்திற்குள் பெறுவதை உறுதி செய்ய விரிவான அணுகுமுறை தேவை என்பதை நான் வலியுறுத்துகின்றேன்.

தேவையான நடைமுறைகள், வழக்குகளில் மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், பாதிக்கப்பட்ட நபர்களை மையப்படுத்திய அணுகுமுறை, நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள், ஒவ்வொரு நிலையிலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பு போன்றன இப்போதைய தேவையாக உள்ளது.

கூடுதலாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கான தேவையான நிதியை அதிகரிப்பது மற்றும் மாநிலங்கள் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கான பயிற்சியை உறுதி செய்வதும் அவசியப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் ஆள் கடத்தலுக்கு எதிரான விரிவான மசோதாவை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தியாவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான போரில், அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் என்னுடைய ஆதரவை இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கின்றேன்''.

இவ்வாறு செந்தில்குமார் எம்.பி. தெரிவித்தார்.

ஆர்.ஷபிமுன்னா

SCROLL FOR NEXT