அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருவதாக உள்ளது என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆன்மிக தலைவரும் வாழும் கலை அமைப்பின் தலைவ ருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் செய்தி யாளர்களிடம் நேற்று கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். நீண்டகாலமாக இருந்துவந்த பிரச்சினையில் இருந்து இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் வழங்குவதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது” என்றார்.
அயோத்தி பிரச்சினையில் மனுதாரர்களிடையே சமரசம் ஏற்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு சமரச குழுவை அமைத்தது. அதில் நீதிபதி எப்எம்ஐ கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இக்குழுவினர் 4 மாதங்களாக மேற்கொண்ட சமரச முயற்சிக்கு பலன் கிடைக்க வில்லை. இதையடுத்து, இந்த வழக்கை தினமும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
யோகா குரு ராம்தேவ்
யோகா குரு பாபா ராம் தேவ் கூறும்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான கொண் டாட்டங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது மற்றவர்களின் மனதை பாதிக்கும். மேலும் மசூதி கட்டுவதற்கான நடவடிக்கையில் முஸ்லிம் சகோதரர்களுக்கு இந்துக்கள் உதவி செய்து முன்னு தாரணமாக திகழ வேண்டும்” என்றார். - பிடிஐ