பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற வரலாற்றில் நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்ட 2-வது வழக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

அரசியல்ரீதியாகவும் மதரீதியாகவும் உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட 2-வது வழக்கு அயோத்தி நில விவகார வழக்காகும்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 விசாரணை நடத்தி அக்டோபர் 16-ம் தேதி முடித்தது.

நூற்றாண்டுகளாகத் தீர்க்க முடியாமல் இருந்து வந்த அயோத்தி நில விவகார வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு பெரும்பான்மையினர் ஏற்கும் வகையிலான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த 5 நீதிபதிகளும் எந்தவிதமான மாறுபட்ட தீர்ப்பை வழங்காமல் ஒரே மாதிரியாக ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். இதற்காக 40 நாட்கள் தொடர்ந்து விசாரணையும் நடத்தியுள்ளார்கள்.

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரு வழக்கு மிக நீண்டநாட்கள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு அளிக்கப்பட்டதில் இது 2-வது வழக்காகும். இதற்கு முன், கடந்த 1973-ம் ஆண்டு கேசவானந்த் பாரதி வழக்கு 68 நாட்கள் விசாரிக்கப்பட்டது. அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பாக இந்த வழக்கு 68 நாட்கள் தொடர் விசாரணை நடந்தது.

மூன்றாவதாக நீண்டநாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்கு என்பது ஆதார் வழக்காகும். இந்த வழக்கு 38 நாட்கள் வரை விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் அயோத்தி வழக்கு விசாரணை அக்டோபர் 18-ம் தேதி தான் முடிப்பதாக நீதிபதிகள் குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் விசாரணையை 17-ம் தேதி முடிப்பதாக அறிவித்து, பின்னர் 16-ம் தேதியே முடித்துக்கொள்வதாக நீதிபதிகள் குழு அறிவித்தது.
அதுமட்டுமல்லாமல், விசாரணை முடிந்த பின், வாதி, பிரதிவாதிகள் எழுத்துபூர்வமாக தங்களின் வாதத்தை அளிக்கவும் 3 நாட்கள் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

SCROLL FOR NEXT