புதுடெல்லி
சிலரை ‘தலிபான்’ சிந்தனை என்ற நோய் வாட்டி வதைக்கிறது, இதுபோன்ற நபர்களுக்கு அரசியல் சட்டத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என ஒவைசிக்கு மத்திய அமைச்சர் நக்வி பதிலளித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி இதுபற்றி கூறுகையில் ‘‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் உச்சமானதாக இருக்கலாம். ஆனால் அது தவறிழைக்காது என கூற முடியாது.
அரசியல் சட்டத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களது உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தானமாகத் தேவையில்லை. 5 ஏக்கர் நிலத்தை நிராகரிக்கிறோம். அதனை ஏற்கும் நிலையில் இருக்க விரும்பவில்லை.
அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் தனது போலி நிறத்தை விடுத்து உண்மையான நிறத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாபர் மசூதிக்குள் 1949-ம் ஆண்டு சிலை வைக்கப்படவில்லை. பாபர் மசூதியின் கதவை ராஜீவ் காந்தி திறந்து விடாவிட்டால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும். நரசிம்மராவ் தனது பணியைச் சரிவர செய்திருந்தால் பாபர் மசூதி இருந்திருக்கும்'' என ஒவைசி கூறினார்.
இதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
‘‘அயோத்தி தீர்ப்பின் மூலம் யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல. நாம் அனைவரும் அமைதியை பேண வேண்டிய நேரம் இது. சிலரை ‘தலிபான்’ சிந்தனை என்ற நோய் வாட்டி வதைக்கிறது.
இதுபோன்ற நபர்களுக்கு அரசியல் சட்டத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. lநீதித்துறையின் மீதும் நம்பிக்கையில்லை. நாட்டின் அமைதி, மனிதநேயம், சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் எந்த நபர்களை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். நாட்டின் அமைதி மற்றும் இணக்கம் நிலவ அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சகோதரத்துவம் நிலவ மக்கள் பங்களிக்க வேண்டும்’’.
இவ்வாறு அவர் கூறினார்.