மும்பை
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் வரும் நவம்பர் 24-ம் தேதி தான் அயோத்திக்கு செல்லவிருப்பதாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும், மசூதி அமைக்க அயோத்தியிலேயே வேறு முக்கியமான பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய உத்தவ் தாக்கரே, "அயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.
இந்தத் தீர்ப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்படும். நான் வரும் 24-ம் தேதி அயோத்திக்குச் செல்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் சிவ சேனா எப்போதுமே தீவிரம் காட்டியிருக்கிறது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும். அவர்தான் ராமர் கோயிலுக்காக ரத யாத்திரை நடத்தினார். அவரிடம் ஆசியும் பெற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
-ஏஎன்ஐ