புதுடெல்லி
அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, நம்பிக்கைக்கான நேரம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
அயோத்தியில் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்குத் தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், "அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும்போது, சமூகத்தில் பரஸ்பர ஒற்றுமையையும் பராமரிக்க வேண்டும். சகோதரத்துவம், அன்ப, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை இந்தியர்களான நமக்குள் வெளிப்படுத்தும் நேரம் இது" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கூறுகையில், "அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. அனைத்துக் கட்சிகளும், சமூகத்தினரும், மக்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளித்து, நூற்றாண்டுகளாக நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பரஸ்பர நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் காக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ