புதுடெல்லி
அயோத்தி பிரச்சினைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்களுக்கு எனது சமர்ப்பணம் என பாஜக மூத்த தலைவர் உமாபாரதி கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தீர்ப்பு குறித்து கூறுகையில், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அயோத்தி பிரச்சினைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணம் செய்தவர்களுக்கு எனது சமர்ப்பணம். இந்த மிகச்சிறந்த பணியில் எங்களை ஈடுபடுத்தி உழைப்பை தரக் காரணமாக இருந்த அத்வானிக்கு சமர்ப்பணம்’’ எனக் கூறியுள்ளார்.