புதுடெல்லி
அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதையடுத்து, அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் எந்த நாளிலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவம்பர் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 16-ம் தேதி சனிக்கிழமை இரு நாட்களும் உச்ச நீதிமன்றத்துக்கு வேலை நாட்கள் இல்லை. மேலும் அயோத்தி வழக்கு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பொதுவாக வேலைநாட்களில்தான் தீர்ப்பு அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் தீர்ப்பு வழங்கப்படாது.
அதுமட்டுமல்லாமல், ரஞ்சன் கோகோயின் கடைசி வேலை நாள் என்பது நவம்பர் 15-ம் தேதியாகும். அடுத்து வரும் இரு நாட்களும் விடுமுறை. 17-ம் தேதியோடு அவர் ஓய்வு பெற உள்ளார். ஆதலால் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் அல்லது அதற்கு முன்பாக 14-ம் தேதி வழங்கப்படலாம் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இயல்பாகவே, நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் அடுத்த நாள் வாதி அல்லது பிரதிவாதி இதில் யாரேனும் ஒருவர் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு அளிக்கலாம். இதற்கான நடைமுறை தீர்ப்பு வழங்கப்பட்டு சில நாட்களில் நடக்கும்.
ஆனால், அயோத்தி வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றமோ அல்லது மத்திய அரசோ, தீர்ப்பு நவம்பர் 14 அல்லது 15-ம் தேதிக்கு முன்பாக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் திடீரென நேற்று இரவு, சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.
அயோத்தி வழக்கில் திடீரென தீர்ப்புத் தேதியை உச்ச நீதிமன்றம் அறிவித்தமைக்கு முக்கியக் காரணமாக, எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களுக்கும் யாரும் திட்டமிட்டுவிடக்கூடாது என்பதற்கான திட்டமிடலாக இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், யாரும் எந்தவிதமான சதித்திட்டம் தீட்டவும் வாய்ப்பு அளித்துவிடக்கூடாது என்பதற்காகவே சனிக்கிழமை (இன்று) திடீரென தீர்ப்பு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏனென்றால், அயோத்தி வழக்கு இரு சமூகத்தினரின் நம்பிக்கை சார்ந்த உணர்வுபூர்வமான விஷயம் என்பதால், உச்ச நீதிமன்றம் மிகுந்த கவனத்துடன் வழக்கின் தீர்ப்பைக் கையாண்டுள்ளது.
மேலும், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் முன் உ.பி. மாநிலத் தலைமை செயலாளர் ராஜேந்திர திவாரி, டிஜிபி ஓ.பி.சிங் ஆகியோரை அழைத்துப் பாதுகாப்பு தொடர்பாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்