புனே
புனேயைச் சேர்ந்த கீதா காலே, வீட்டு வேலை செய்துவரும் பணிப்பெண். பல வீடுகளில் துணி துவைத்தல், பாத்திரம் தேய்ப்பது, வீட்டை சுத்தப்படுத்துதல் என்று வேலைகளைச் செய்து அதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.
திடீரென அவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. மாதம் ரூ.4,000 ஊதியத்தை இழந்ததால் விரக்தி அடைந்தார். அவரது நிலை அறிந்த தனியார் நிறுவனம் ஒன்றில் மூத்த மேலாளராக பணியாற்றி வரும் தனஸ்ரீ என்பவர் அவருக்கு தன் வீட்டில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கினார்.
மேலும், பணிப் பெண் கீதா காலேயின் பெயர், அனுபவம், அவர் செய்யும் வீட்டு வேலைகள், அதற்கான ஊதியம் ஆகியவற்றையும் அவரது தொலைபேசி எண்ணையும் தெரிவித்து அழகான விசிட்டிங் கார்டை தன வடிவமைத்தார். 100 கார்டுகளை அச்சிட்டு அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அங்குள்ள பாதுகாவலர்கள் மூலம் வழங்கச் செய்தார்.
மேலும், முகநூலிலும் அதை வெளியிட்டார். இதைப் பார்த்துவிட்டு கீதா காலேக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகளும் வீட்டு வேலைகள் செய்வதற்கான பணி வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. கீதா காலேயின் தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நல்ல வாய்ப்புகளை ஏற்கப் போவதாக கீதா காலே மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.