புதுடெல்லி
பாகிஸ்தானில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இந்திய வீரரை சுட்டுக்கொன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.
பாகிஸ்தான் நேற்றிரவு முதல் கிருஷ்ணா காட்டி செக்டரில் இரண்டு முறை போர் விதிமீறலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஐந்து முதல் ஆறு நபர்கள் எல்லை தாண்டி ஊடுருவியுள்ளனர். இவர்கள் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காதி செக்டர் எல்லையின் இந்தியப் பகுதிக்குள் கட்டுப்பாட்டுக் கோட்டை ஊடுருவினர்.
அப்போது அவர்கள் இந்திய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் நடத்திய தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டில் காயங்கள் ஏற்பட்ட ராணுவ வீரர் ராகுல் பைரு சுலேகர் (21), அருகிலுள்ள மருத்துவ உதவி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
உயிரிழந்த சுலேகர் கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தில் உள்ள உச்சகான் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தாய் கீதா.
''ராணுவ வீரர் சுலேகர் துணிச்சலானவர். அவரது உயர்ந்த தியாகத்திற்கு தேசம் எப்போதும் அவருக்குக் கடன்பட்டிருக்கும்,'' என்று ராணுவம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரிகள் இருவர் ஐஏஎன்எஸ்ஸிடம் கூறியதாவது:
"ஊடுருவியவர்கள், அரை டஜன் எண்ணிக்கையில் இருந்தனர். தூரத்திலிருந்து பார்த்தபோது அவர்கள் கட்டுப்பாட்டு எல்லையைக் கடந்து வந்தது தெரிந்தது. ராணுவ நிலை அருகே அவர்கள் சுமார் 100 அடி தூரத்தை நெருங்கியபோது ராணுவம் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஊடுருவியவர்களின் தரப்பில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் தேடும் பணி அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.''
இவ்வாறு மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.ஊடுருவிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகின்றனர்.
ஐஏஎன்எஸ்