கொல்கத்தா
பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பொருளாதாரத்தை தடம் புரளச் செய்த, பயனில்லாத நடவடிக்கை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பாஜனர்ஜி விமர்சித்துள்ளார்.
அதேசமயம் மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது உலகப் பொருளாதாரத் சூழல்தான், பணமதிப்பிழப்புக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவி்த்துள்ளது.
நாட்டில் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ட்விட்டரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார்.
அவரின் பதிவில், " பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் மூன்றாண்டு நிறைவடைகிறது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை அழிக்கும் என்று எனக்கு தெரியும். பொருளாதாரத்தை தடம் புரளச் செய்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. மிகப்பெரிய பொருளாதார வல்லுநர்கள், சமானிய மக்கள், வல்லுநர்கள் முதல் இப்போது இதை ஒப்புக்கொள்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் மூலம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயனில்லாத, ஆக்கப்பூர்வமற்ற செயல் எனத் தெரியவந்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நாளில் இருந்து பொருளாதார சீரழிவு தொடங்கிவிட்டது, இப்போது எங்கு வந்து முடிந்திருக்கிறது பாருங்கள். வங்கிச்சிக்கல், பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், விவசாயிகள் முதல் இளம் தலைமுறையினர் வரை, தொழிலாளர் முதல் வர்த்தகர்கள், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் " எனத் தெரிவித்தார்
முதல்வர் மம்தா பானர்ஜியின் விமர்சனத்துக்கு பாஜக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக பொதுச்செயலாளர் சயான்தன் பாசு கூறுகையில், " மம்தா அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பதிலாக, உறுதியான நடவடிக்கை எடுத்து மாநிலத்தின் பொருளாதார சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது சிறப்பாக இருக்கும்.
உலகப் பொருளாதார சிக்கல் காரணமாகவே இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, இந்தியப் பொருளாதாரம் மட்டுமல்ல பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு புரிதல் இல்லாத விஷயத்தில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
மம்தா பானர்ஜி அரசில் ஒரு தொழிற்சாலையாவது மாநிலத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறதா. மாநிலத்தில் தொழில்சூழலையும், பொருளாதார சூழலையும் மேம்படுத்த வேண்டும் என்று மம்தாவை நான் கேட்டுக்கொள்கிறேன் " என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
பிடிஐ