இந்தியா

இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே எச்சரிக்கும் பன்னாட்டு செயற்கைக் கோளுக்கு மறைந்த அப்துல் கலாம் பெயர்: ‘கேனியஸ் அமைப்பு அறிவிப்பு

இரா.வினோத்

இயற்கை சீற்றங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய் வதற்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பன்னாட்டு செயற்கைக் கோளுக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலை வர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப் படும் என்று 'கேனியஸ்' அமைப்பு தெரி வித்துள்ளது.

கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியாவின் கூட்டு முயற்சியில் 'கேனியஸ்' அமைப்பு (CANada-EUrope-US-ASia) 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கனடா வின் மான்ட்ரியல் நகரை தலைமையக மாகக் கொண்டு செயல்படும் இது, 'பூமி எதிர்க்கொள்ளும் இயற்கை பேரிடர்கள்' பற்றி ஆராய்ச்சி செய்து வருகிற‌து.

கேனியஸ் அமைப்பின் தலைவர் மிலின்ட் பிம்ப்ரிக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாறிவரும் சூழ்நிலை மாற்றங்களின் காரணமாக நம்முடைய பூமி பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறது. திடீரென நிகழும் இந்த சம்பவங்கள் உயிரினங்களுக்கு பெரும் துன்பத்தை தருகின்றன. எனவே பூமி எதிர்க்கொள்ளும் நிலநடுக்கம், வெள்ளம், வறட்சி, சூறாவளி, பனிப்புயல் போன்ற இயற்கை சீற்றங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து எச்சரிக்க சர்வதேச அளவில் பொதுவான செயற்கைக் கோள் ஒன்று தேவை.

மானுடத்தின் நன்மைக்காக அத்தகைய பன்னாட்டு செயற்கைக்கோளை விண் ணில் செலுத்த வேண்டும் என ‘கேனியஸ்' அமைப்பு முடிவெடுத்தது. இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஐநா சபையின் இயற்கை பேரிடர் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இயற்கை பேரிடரை கண்காணிக்கும் செயற் கைக் கோளின் தேவையை உணர்ந்த ஐநா சபையும் உலக வங்கியும் இந்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்கிய‌து. விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த செயற்கைக் கோளுக்கு ‘‘குளோபல்சாட் ஃபார் டிஆர்ஆர்'' (GlobalSat for DRR) என பெயரிடப்பட்டிருந்தது.

இயற்கை பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச் சூழல் மேம்பாடு உள்ளிட்டவைகளில் ஐநா சபையின் நோக்கமும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நோக்கமும் ஒன்றே. தேசத்தின் எல்லைகளை கடந்து, மனித நேயத்தைப் போற்றும் கண்டு பிடிப்புகளும், விண்வெளி ஆய்வுகளும் தேவை என்பதை கலாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

மேலும், தனது 'உலக விண்வெளி இயக்கம் -2050' என்ற கட்டுரையில் இயற்கை பேரிடர்கள், இயற்கை ஆற்றல், குடிநீர் பஞ்சம், சுகாதாரம் சார்ந்த கல்வி மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை போன்றவற்றைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எனவே இயற்கை பேரிடரை கண் காணிக்கும் பன்னாட்டு செயற்கைக் கோளுக்கு கலாமின் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

எனவே இந்த செயற்கைக் கோளுக்கு 'கலாம் குளோபல்சாட்' (UN Kalam GlobalSat) என பெயரிட தீர்மானிக்கப் பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐநா சபை மாநாட்டின்போது 150 நாடுகளின் ஒப்புதலுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் மறைந்த இந்திய விஞ்ஞானியான அப்துல் கலாமுக்கு, சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதால் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் விண்வெளி ஆராய்ச்சித் துறையின் மாணவர்கள் இதை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

SCROLL FOR NEXT