உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் : கோப்புப்படம் 
இந்தியா

அயோத்தி வழக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் உ.பி. உயர் அதிகாரிகள் சந்திப்பு

செய்திப்பிரிவு

லக்னோ

அயோத்தி நில விவகார வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகவிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை, உத்தரப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று சந்திக்க உள்ளனர்.

அயோத்தியில் பாபர் மசூதி-ராமஜென்ம பூமி நில விவகார வழக்கில் நிலத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் 40 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இருதரப்பு வாதங்கள் கடந்த மாதம் 16-ம் தேதி முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அயோத்தி நில விவகார வழக்கில் தீர்ப்பை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு விரைவில் வெளியாவதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

அயோத்தியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் தேவையில்லாத கருத்துகளையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பதிவிட வேண்டாம் என்றும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 40 ஆயிரம் துணை ராணுவப் படையினர் உத்தரப் பிரதேச பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் உத்தரப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து உ.பி. அரசு வட்டாரங்கள் கூறுகையில், "நவம்பர் 13-ம் தேதி கார்த்திகை பூர்ணிமா, பிரகாஷ் பர்வ், கார்த்திக் மேளா ஆகிய பண்டிகைகள் வருவதால், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது குறித்த தகவலை உ.பி. உயர் அதிகாரிகள் தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

முன்னதாக, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று 3 மணி நேரம் வரை தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT