மும்பை
மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜக மூத்த தலைவர்கள் மும்பையில் நேற்று சந்தித்துப் பேசினர்.
மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றன. சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்துவதால் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனிடையே தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் புதிய அரசு அமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டது. ஆனால் சிவசேனாவுக்கு ஆதரவு தர முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் பகிரங்கமாக அறிவித்தார்.
இந்தப் பின்னணியில் பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை மும்பையில் நேற்று சந்தித்துப் பேசினர். இதன்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த சந்திரகாந்த் பாட்டீல், "மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசு அமைய மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். ஆனால் புதிய அரசு பதவியேற்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இது குறித்தும் சட்டரீதியான தீர்வுகள் குறித்தும் ஆளுநரிடம் ஆலோசனை நடத்தினோம்" என்று தெரிவித்தார்.
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருந்தால் ஆட்சி அமைக்கலாமே? அரசமைப்பு சாசனம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. சிவசேனாவை சேர்ந்தவர் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்பார். எங்களுக்கு மாற்று வழிகளும் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிவசேனா எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சிவசேனாவின் 56 எம்எல்ஏக்கள் மும்பை ஓட்டல் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியரசுத் தலைவர் ஆட்சி?
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர அரசியலில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் நாளை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிராவின் அட்வகேட் ஜெனரல் ஆசுதோஷுடம் ஆளுநர் கோஷ்யாரி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.