லக்னோ
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் நாடுமுழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தன.
முன்னதாக அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் நாடுமுழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே அயோத்தி உட்பட உத்தர பிரதேசத்தில் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப்படை வீரர்கள் 4 ஆயிரம் பேரை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.