இந்தியா

எல்பிஜி நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் கின்னஸ் சாதனை: ரூ.23,618 கோடி பட்டுவாடா

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் சுமார் 14 கோடி சமையல் காஸ் (எல்பிஜி) வாடிக்கையாளர்களுக்கு ரூ.23, 618 கோடியை ஆன்லைனில் வழங்கி உலகிலேயே மிகப்பெரிய நேரடி மானிய உதவி திட்டம் என்ற கின்னஸ் சாதனையை எல்பிஜி நேரடி பணப்பரிமாற்ற திட்டம் படைத்துள்ளது.

எல்பிஜி நுகர்வோருக்கான மானியத்தை நேரடியாக அவர் களின் வங்கிக்கணக்குக்கு ஆன்லைனில் வழங்கும் ‘பாகல்’ திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியது. நுகர்வோர்கள் தங்கள் ஆதார் எண் அல்லது வங்கிக்கணக்கு விவரங்களை கொடுத்தால் போதும். முன்பதிவு செய்து காஸ் வழங்கப்படும்போது விநியோகஸ்தர்களிடம் முழு கட்டணத்தையும் கொடுத்துவிட வேண்டும். அடுத்த சில நாட்களில் மானியத்தொகை அவர்களின் வங்கிக்கணக்கு ஆன்லைனில் வந்துவிடும்.

எல்பிஜி நேரடி பணப்பரிமாற்ற திட்டம் நடைமுறைக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட் ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்களின் சமையல் கியாஸ் நுகர்வோரில் 80 சதவீதம் பேர் இந்த திட்டத்தில் இணைந்துவிட்டனர். தற்போதைய நிலவரப்படி, சுமார் 14 கோடி நுகர்வோர் நேரடி மானியத்திட்டத்தில் இணைந்துள் ளனர். அவர்களுக்கு ரூ.23,618 கோடி மானியத்தொகை ஆன்லைனில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய நேரடி மானிய உதவி திட்டம் என்ற சிறப்பை பெறும் நோக்கில் கின்னஸ் சாதனைக்காக மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் விண்ணப்பித்திருந்தது. இதை கின்னஸ் உலக சாதனை அமைப்பு ஆராய்ந்து இது மிகப்பெரிய மானிய திட்டம்தான் என்று கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இது இந்திய அரசுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 14 கோடி நுகர்வோர் நேரடி மானியத்திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.23,618 கோடி மானியத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT