இந்தியா

தாசில்தார் விஜயா ரெட்டி கொலையின் பின்னணியில் யார்? - தெலங்கானா போலீஸாரிடம் சிக்கிய செல்போன் ஆதாரம்

செய்திப்பிரிவு

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்

தெலங்கானாவில் தாசில்தார் விஜயாரெட்டியின் கொலைப் பின்னணி குறித்து ஹைதராபாத் போலீஸாருக்கு செல்போன் மூலம் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூர் மேட் மண்டலத்தில் தாசில்தாராக பணியாற்றியவர் விஜயாரெட்டி. இவரை, ரமேஷ்என்ற விவசாயி கடந்த திங்கட்கிழமை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். பின்னர், தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சம்பவத்தில் தாசில்தார் விஜயாரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜயாரெட்டியை காப்பாற்ற முயன்ற அவரது ஓட்டுநரும் சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.

இதனிடையே, போலீஸில் சரணடைந்த ரமேஷ், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தாசில்தார் விஜயாரெட்டியை ரமேஷ் ஏன் கொலை செய்தார்? என்பது குறித்துஉதவி காவல் ஆணையர் நரசிம்மா ரெட்டி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

ரமேஷின் செல்போனில் அவர்கடந்த ஒரு வாரமாக பேசிய நபர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சில ரியல் எஸ்டேட் வர்த்தகர்களின் எண்களும் இருப்பது தெரியவந்துள்ளது.

அரசு நிலத்தில் பரம்பரை, பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ரமேஷ் குடும்பத்தாரின் 7 ஏக்கர் நிலத்திற்கு தாசில்தாரிடமிருந்து நிலப்பட்டா பெற்று அதனை விற்க ஒரு கும்பல் தீவிரம் காட்டி வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஆதலால், பணத்தாசை காண்பித்து ரமேஷை கொலை செய்ய தூண்டும் அளவுக்கு ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் பின்புலமாக இருந்துள்ளனர் என போலீஸார் தெரிவிக்கின்றனர். எனவே,இவ்வழக்கில் ரியல் எஸ்டேட்வர்த்தகர்கள், அவர்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல்வாதிகள் என பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தற்போது தாசில்தார்கள், பொதுமக்களை கண்டு பயப்படும் நிலை உள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு தேவை என ஆட்சியர்களிடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு அவர்கள் சென்று விட்டனர்.

அந்த வகையில், கர்னூல் மாவட்டம், பத்திகொண்டா தாசில்தாரான உமா மகேஸ்வரி, தன்னை பார்க்கவரும் பொதுமக்கள் 10 அடி தள்ளிநின்று தங்களது பிரச்சினைகளை கூற வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர், 10 அடி தூரத்தில் ஒரு கயிற்றையும் கட்டி வைத்துள்ளார்.

இதேபோல், பல்வேறு தாசில்தார்களும், பொதுமக்கள் ஒருவர்பின் ஒருவராக மட்டுமே தங்களைகாண உள்ளே வர வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT