ரோஹித் சர்மா : கோப்புப்படம் 
இந்தியா

புதிய சாதனை படைக்கும் ரோஹித் சர்மா: சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளுவாரா?

செய்திப்பிரிவு

ராஜ்கோட்

ராஜ்கோட்டில் நாளை நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைக்க உள்ளார்

இந்தியா, வங்கதேசம் இடையிலான 2-வது டி20 போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. டெல்லியில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடரை வெல்வதற்கு நாளைய போட்டியில் இந்திய அணி வெல்வது கட்டாயமாகும். இல்லாவிட்டால் தொடரை வங்கதேசம் வென்றுவிடும்.

இதுவரை எந்த இந்திய வீரர்களும் டி20 போட்டியில் நிகழ்த்தாத சாதனையை ரோஹித் சர்மா நாளை நிகழ்த்தஉள்ளார். இதுவரை எந்த இந்திய வீரர்களும் 100 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை. நாளை 100-வது சர்வதேச போட்டியில் ரோஹித் சர்மா விளையாட உள்ளார். இந்திய அளவில் முதல் வீரரும், உலக அளவில் 2-வது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெறுகிறார்.

கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து 12 ஆண்டுகளாக ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த போட்டியில் விளையாடி தோனியின் சாதனையை முறியடித்தார். நாளைய ஆட்டத்தில் 100-வது போட்டியில் விளையாடி முத்திரை பதிக்க உள்ளார்.

இதுமட்டுமல்லாமல் டி20 போட்டியில் அதிகமான ரன்கள் சேர்த்த வகையில் விராட் கோலியையும் கடந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மற்றொரு சாதனை நிகழ்த்தவும் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது. இதுவரை டி20 போட்டிகளில் அதிகமான ரன் சேர்த்த இந்திய வீரர்களில் விராட் கோலி 257 இன்னிங்ஸ்களில் 8,556 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

2-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா 303 இன்னிங்ஸ்களில் 8,392 ரன்களுடன் 2-வது இடத்திலும், ரோஹித் சர்மா 306 இன்னிங்ஸ்களில் 8,321 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

நாளைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா 72 ரன்கள் சேர்த்தால் அல்லது 3-வது போட்டியிலும் சேர்த்து 72 ரன்கள் சேர்த்தால் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பார். இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிகமான ரன் சேர்த்த இந்திய வீரர்களில் சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா 2-வது இடத்தை பிடிக்க முடியும்.

4-வது இடத்தில் ஷிகர் தவண் 247இன்னிங்ஸ்களில் 7073 ரன்களும், தோனி 283 இன்னிங்ஸ்களில் 6,621 ரன்களுடனும் உள்ளனர்.

மேலும் நாளைய ஆட்டத்தில் வங்கதேச வீரர் மகமதுல்லா ரியாத் 2 சிஸ்கர்கள் அடித்தால் டி20 போட்டிகளில் 50 சிக்ஸர்கள் அடித்த முதல் வங்கதேச பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது

பிடிஐ

SCROLL FOR NEXT