விஜயவாடா,
ஆன்லைன் ஆப்களான ஸ்விக்கி, ஸொமாட்டோ, உபர் ஈட்ஸ் உள்ளிட்ட உணவு டெலிவரி வர்த்தக நிறுவனங்கள் அதிக கமிஷன் கட்டணங்கள் வசூலிப்பதால் விஜயவாடா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து நவ. 11-ம் தேதியன்று காலை 6 மணி முதல் ஸ்விக்கி ஆப்-ஐ லாக் - இன் செய்யப்போவதில்லை என்று போராட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பி.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த டெலிவரி ஆப்கள் தற்போது ஆர்டர்களின் பேரில் 18% முதல் 25% வரை கமிஷன் கட்டணம் வசூலித்து வருகிறது. உணவு இடுபொருட்களின் விலை உயர்வு, நடைமுறைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் கூடுதலாக இந்தக் கமிஷன்களும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது.
ஆன்லைன் ஆப்களான ஸ்விக்கி, ஸொமாட்டோ, உபர் ஈட்ஸ் மற்றும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக ஆப்கள் தொடங்கியோர் கமிஷனே இல்லாமல் தொடங்கி பிறகு மெதுவாக 10% கமிஷன் என்று தொடங்கி தற்போது ஹோட்டல்களிடமிருந்து 25% கமிஷன் வசூலிக்கின்றனர். இதுதவிர ஆர்டர் ரத்தானால் அந்தச் செலவுகளையும் தொலைபேசிக் கட்டணங்கள் மற்றும் பிற மறைமுகக் கட்டணங்களையும் நாங்களே சுமக்க வேண்டியுள்ளது.
கூடக்குறைவாக அனைத்து ஆப்களும் இதனை வழக்கமாக்கி விட்டன. இந்த கமிஷன் எங்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. எனவே நவ. 11ம் தேதி முதல் முதற்கட்டமாக ஸ்விக்கி ஆப் லாக் - இன் செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். இது எப்படி பயனளிக்கிறது என்பதைப் பொறுத்து பிற ஆப்களையும் இதே வகையில் எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளோம்.
நியாயமான முறையில் ஆப்கள் இயங்கிட அரசின் தலையீடு தேவை என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்” என்றார்.
இந்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் சுமார் 240 ஹோட்டல்கள் உள்ளன. நகரத்தில் பெரும்பாலான ஹோட்டல்கள் இதில் அடங்கும்.