புதுடெல்லி
டெல்லியில், காவல்துறையினரை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து 3-வது நாளாக இன்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது. மிகப்பெரிய கலவரமாக மூண்ட இச்சம்பவத்தில் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். காவல்துறையினர் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த மோதல் குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்க் விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் திங்கள் முதல் நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் டெல்லியில் காவலர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வெளியே சீருடையுடன் போலீஸார் போரட்டம் நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போலீஸார் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்
இந்தநிலையில் டெல்லியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் 3-வது நாளாக வழக்கறிஞர்கள் இன்றும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் அவர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற வாயில்களில் திரண்ட வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர்.