டெல்லியில் அனுமதியின்றி செயல்படும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர் பான சட்டத்தை கண்டிப்புடன் நடை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டின் தலைநகரமான டெல்லியில் சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் போன்றவற்றில் பாதுகாப்பு பணிகளுக்காக ‘செக்யூரிட்டி’ என அழைக்கப்படும் காவலாளிகள் நியமிக்கப்படுகின்றனர். பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் ஆயிரக்கணக்கில் நியமிக்கப்படும் இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. பெயரளவில் பாதுகாவலராக கையில் துப்பாக்கி மற்றும் சீருடையில் இருக்கும் இவர்களால் ஆபத்தான நேரங்களில் துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்படுவோரை காப்பாற்ற முடிவதில்லை. மேலும் இவர்களில் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் பிரச்சினை அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை.
அரசு உரிமம் பெறாமல் நூற்றுக்கணக்கில் செயல்படும் பாதுகாப்பு நிறுவனங்களின் கீழ் இவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மீது டெல்லி காவல் துறைக்கு வரும் புகார்கள் அதி கரித்து வருகின்றன.
எனவே, இவர்களை கண் காணித்து நடவடிக்கை எடுப்ப துடன் அத்தொழிலை முறைப் படுத்தவும் கேஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி மாநில உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஓ.பி.மிஸ்ரா கூறும்போது, “தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 2005-ன்படி டெல்லியில் கடந்த 2013 மார்ச் வரை முறையான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கை 348 மட்டுமே. உரிமம் பெறாமல் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே இவர்களின் உரிமங்களை சரிபார்த்து, அதை பெறாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்றார்.
இது தொடர்பாக மிஸ்ரா, டெல்லி அரசின் அனைத்து துறை கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் உரிமங்களை சரிபார்ப்பதுடன் இந்த நிறு வனங்களின் காவலாளிகளுக்கு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிக்கும்படியும் உத்தர விட்டுள்ளார்.
கடந்த 2005 ஜூனில் ‘தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் முறைப் படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் 4-வது பிரிவின்படி, நாடு முழுவதும் எந்தவொரு தனியார் நிறுவனமும் அரசு உரிமம் பெறாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாது. இதை மீறுவோருக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ. 25,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த டெல்லி அரசு கடந்த 2009 அக்டோபர் 9-ல் ஓர் உத்தரவு பிறப்பித்தது.
இதன் மூலம், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை கண்காணிப்பதற்கு என டெல்லி உள்துறை அமைச்சகத்தில் தனியாக கூடுதல் செயலாளர் நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை தற்போது ஓ.பி.மிஸ்ரா வகித்து வருகிறார்.
தனியார் பாதுகாப்பு நிறுவன காவலாளிகளால் டெல்லியில் நிலவும் பிரச்சினை, நாட்டின் மற்ற மாநிலங்களிலும் நிலவுவதாகக் கூறப்படுகிறது.