லக்னோ
உத்தரபிரதேச மின் நிறுவன (யுபிபிசிஎல்) ஊழியர்களின் ரூ.2,600 கோடி பி.எப். பண முறைகேடு புகார் தொடர்பாக, யுபிபிசிஎல் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஏ.பி.மிஷ்ரா நேற்று கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, யுபிபிசிஎல் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் ஏ.பி.மிஷ்ரா. அகிலேஷுக்கு மிகவும் நெருக்கமானவராக வலம் வந்த அவருக்கு ஓய்வுபெற்ற பிறகும் 3 முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மிஷ்ரா மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில் 2017-ம் ஆண்டு உ.பி.முதல்ராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றார்.
பின்னர் மிஷ்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், டிஎச்எப்எல் நிறுவனம் நிதி முறைகேடு புகாரில் சிக்கி உள்ளது. இந்த நிறுவனத்தில் யுபிபிசிஎல் ஊழியர்களின் ரூ.2,600 கோடி பி.எப். பணம் முதலீடு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் கடந்த 3-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் யுபிபிசிஎல் ஊழியர்கள் அறக்கட்டளை மற்றும் அந்நிறுவன பி.எப். அறக்கட்டளையின் முன்னாள் செயலாளர் அந்நிறுவன நிதித் துறை முன்னாள் இயக்குநர் சுதான்ஷு துவிவேதி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதே நாளில் இருவரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஆதித்யநாத் சிபிஐ-க்கு பரிந்துரை செய்திருந்தார். மேலும் இந்த பரிந்துரையை சிபிஐ ஏற்கும் வரை, விசாரணை நடத்துமாறு, மாநில காவல் துறையின் ஒரு அங்கமான பொருளாதார குற்றப் பிரிவு இயக்குநருக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், யுபிபிசிஎல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஏ.பி.மிஷ்ராவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த தகவலை மாநில காவல் துறை தலைவர் ஓ.பி.சிங் நேற்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- பிடிஐ