என்.மகேஷ்குமார்
ஹைதராபாத்
தெலங்கானாவில் எரித்து கொல்லப்பட்ட தாசில்தார் விஜயாரெட்டியை காப்பாற்ற முயன்ற அவரது கார் ஓட்டுநரும் பலத்த தீக்காயமடைந்து உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லாபூர் மேட் மண்டல தாசில்தார் விஜயா ரெட்டி (38). இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது அலுவலகப் பணியில் இருந்தார். அப்போது, சுரேஷ் என்ற விவசாயி, தாசில்தார் அலுவலகத்துக்குள் நுழைந்து, விஜயாரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். பின்னர், தானும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலைக்கு முயன்றார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்ட தாசில்தாரின் கார் ஓட்டுனர் குருநாதம் (30) மற்றும் ஒரு ஊழியர், அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், தாசில்தார் விஜயா ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, விவசாயி சுரேஷ், தீக்காயங்களுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
காரணம் என்ன?இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில், இது லஞ்சம் தொடர்பான கோணத்தில் விசாரிக்கப்பட்டது. தாசில்தார் விஜயா ரெட்டி நிலப்பட்டா வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதால், அவரை சுரேஷ் எரித்துக் கொன்றதாக கூறப்பட்டது.
ஆனால், தொடர் விசாரணையில், வேறு தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த கொலைக்கு பின்னனியில் அரசியல் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான சில ஆடியோக்களும் வெளி வந்த வண்ணம் உள்ளன.
விவசாயி சுரேஷ், 7 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது குடும்பமே பரம்பரை பரம்பரையாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக குத்தகை செய்யும் விவசாயிகளுக்கே அந்த நிலம் சொந்தம் என தற்போதைய அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால், 7 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயரில் மாற்றி தருமாறு தாசில்தார் விஜயா ரெட்டியிடம் சுரேஷ் மனு அளித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் இணை ஆட்சியர் மற்றும் கோட்டாச்சியர் அளவில்தான் முடிவெடுக்க முடியும் என சுரேஷிடம் தாசில்தார் விஜயாரெட்டி பல முறை கூறியுள்ளார். ஆனால், சுரேஷ், தான் லஞ்சம் கொடுக்கவும் தயார் என கூறியுள்ளார். இதற்கு விஜயா ரெட்டி ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தாசில்தார் விஜயாரெட்டியை தீயிட்டு கொளுத்திய போது, அவரை தைரியமாக காப்பாற்ற முன் வந்தார் அவரது ஓட்டுநர் குருநாதம் (30). இதில் குருநாதமும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
வேலைநிறுத்தப் போராட்டம்தாசில்தார் விஜயா ரெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலம் முழுவதும் வருவாய் துறையினர் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடலுக்கு அஞ்சலிஇதனிடையே, விஜயா ரெட்டியின் உடல் நாகோலில் உள்ள மயானத்தில் நேற்று மதியம் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக விஜயாரெட்டியின் உடலுக்கு அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.