புதுடெல்லி
டெல்லியில் மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி காரில் சென்ற பாஜக மூத்த தலைவர் விஜய் கோயலிடம் போக்குவரத்து போலீஸார் 4,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
டெல்லியில் காற்று மாசைக் குறைக்க ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதன்முதலில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டது.
அந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக இது நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் டெல்லியில் காற்று மாசு கணிசமாகக் குறைந்திருப்பதாக டெல்லி அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்தபின் மீதமிருக்கும் வைகோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லி வரை வந்து சேர்கிறது.
இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்துள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் காற்று மாசைக் குறைக்க மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டத்தை அமலாக்கப்போவதாக கடந்த மாதமே டெல்லி அரசு அறிவித்தது.
ஏற்கெனவே அறிவித்தபடி இந்தத் திட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்றார். இதுபோலவே வேறு சில அமைச்சர்களும் சைக்கிளில் சென்றனர்.
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சக அமைச்சர்கள் சிலருடன் ஒரே காரில் அலுவலகம் சென்றார். கேஜ்ரிவாலுடன், அமைச்சர்கள் சத்தியேந்திர ஜெயின், கோபால் ராய் ஆகியோர் ஒரே காரில் பயணம் செய்தனர்.
இந்நிலையில் பாஜகவைச்சேர்ந்த மூத்த தலைவர் விஜய் கோயல் தடை உத்தரவை மீறி ஒற்றை இலக்க எண் கொண்ட காரில் பயணம் செய்தார். அவருடன் பாஜக நிர்வாகிகள் சிலரும் சென்றனர். இதையடுத்து போக்குவரத்து போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி அபராதம் வசூலித்தனர்.
4 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்திய விஜய் கோயல் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனங்களை இயக்கும் திட்டத்தால் 1-2 சதவீத அளவுக்கே காற்று மாசைக் கட்டுப்படுத்த முடிகிறது. இதற்காக அபராதம் விதிப்பது சாதனை அல்ல. உங்கள் கட்டளைகளை யாரும் மதிக்க மாட்டார்கள். பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
மொத்தம் 1.5 லட்சம் தொழிற்சாலைகள் டெல்லியைச் சுற்றி உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் ஏதும் செய்யாமல் ஆட்சி முடிவடையும் தருவாயில் அரசியலுக்காக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடலாமா. இதனால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை.
அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக புகார் கூறும் டெல்லி அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஏன். டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்க மத்திய அரசு உண்மையிலேயே பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’’.
இவ்வாறு விஜய் கோயல் கூறினார்.