மும்பை
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பாஜக, சிவசேனா இடையே கடந்த 8 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருவதால், மாநில ஆளுநரை இன்று சந்தித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பேச உள்ளார்.
ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று மாலை சஞ்சய் ராவத் சந்திப்பார் என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து, அதன் முடிவுகள் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியாகின. இதில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.ஆனால், ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு சிவசேனா கேட்பதால், அதை வழங்க மனமின்றி இரு கட்சிகளும் ஆட்சி அமைக்கத் தயக்கம் காட்டி வருகின்றன.
இதனால், கடந்த 8 நாட்களுக்கும் மேலாக மாநிலத்தில் புதிய ஆட்சி அமையாமல் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகியும் இன்னும் புதிய ஆட்சி அமையவில்லை. இன்று மாலை நான் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியைச் சந்திக்க இருக்கிறேன்.
இந்த மாநிலத்தின் பாதுகாவலர் ஆளுநர் என்பதால், அவரைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச இருக்கிறேன். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக இருக்குமே தவிர அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்காது. தற்போது மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்துப் பேசுவேன். எங்களுடைய நிலைப்பாட்டையும் ஆளுநரிடம் தெளிவாக எடுத்துக் கூறுவோம்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில், "பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றால், அது முதல்வர் பதவி குறித்து மட்டும்தான். மாநிலத்தில் சிவசேனா கட்சியினாலும் ஆட்சி அமைக்க முடியும். 170 எம்எல்ஏக்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதனிடையே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் , எப்போது பதவியேற்பு விழா நடக்கும் என்று நிருபர்கள் நேற்று கேட்டனர். அதற்கு அவர், " விரைவில் பதவியேற்பு விழா நடக்கும். அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்தித்து மாநிலத்தின் சூழல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதேபோல, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் மாநில அரசியல் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பிடிஐ